Wednesday, December 31, 2008

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நாள் வாழ்த்துக்கள். புத்தாண்டை ஒரு புது உயிரின் உதயத்துடன் துவங்கினேன், ஆம் நேற்று இரவு 11 மணிக்கு ஆரம்பமான ஒரு குதிரையின் பிரசவம் 11:50 க்கு முடிவுற்றது. இல்லை இல்லை ஒரு உயிர் ஆரம்பித்தது.....
ஒரு முறை ஒரு குறிப்பிட்ட stallion உடைய fertility மிக குறைந்து காணப்பட்டது, அதனுடைய விந்து வை எடுத்து பரிசோதனை செய்ய முடிவு செய்தோம். ஆனால் பிரச்னை என்ன வென்றால் விந்துவை சேகரிக்க எங்களிடம் artificial vagina எனப்படும் செயற்கை பெண் உறுப்பு இல்லை. நான் சில புத்தகங்களை படித்தபோது, மனிதர்களுக்கான கருத்தடுப்பு சாதனமான condom கலை குதிரைகளிலும் உபயோகப்படுத்தலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் பெரிய டாக்டர் இடம் சென்று நான் இதைப்பற்று எடுத்து கூறினேன், அதற்க்கு அவர் condom பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், அதில் அவருக்கு முன் அனுபவம் இல்லை என்றும் கூறினார், இருந்தாலும் நீங்கள் முயற்சி செய்து பாருங்கள் என அனுமதி அளித்தார். நான் உடனே என் நண்பர் மற்றும் பண்ணையின் துணை மேலாளரான முரளியிடம் condom (ஆணுறை) வாங்கி வருமாறு கூறினேன். அவர் என்னிடம் எந்த brand வேண்டும் என வினவினார், நான் அவரிடம் ரெண்டு மூணு கம்பனி ஆணுறை வாங்கி வாருங்கள் என்று கூறினேன். அவரும் கடைக்கு சென்று கடைக்காரரிடம் ஆணுறை கேட்டுள்ளார், கடைக்காரர் எந்த ஆணுறை வேண்டும் என வினவி உள்ளார், அதற்கு முரளி "இருக்கறதிலேயே நல்ல பெருசா இருக்கறதா குடுங்க" என கூற கடையில் இருந்த மற்ற வாடிக்கையாளர்கள் அவரை ஒரு கேவலமான ஜந்துவை பார்ப்பது போல் பார்த்துள்ளனர். என்னிடம் வந்து பொருமி தள்ளி விட்டார். இந்த அவமானம் போதாது என்று, கம்பனியிலிருந்து அதற்கான பணத்தைப்பெருவதர்க்குள் அவர் பட்ட பாடு,"குதிரைக்கு ஆணுறை வாங்கியதற்கான செலவு" என கணக்கெழுத auditor அலுவலகத்தில் அனைவரும் விழுந்து சிரித்தது அவருக்கு எரியும் விளக்கில் எண்ணெய் விட்டது போல் ஆகி விட்டது.

Sunday, December 28, 2008

ஒரு முறை காலை ஆறு மணிக்கே பீல்ட் மென் என்னை தேடி வந்தார், எப்போதுமில்லாத வழக்கமாக நம்மை தேடி வந்துள்ளாரே என்ன விஷயம் என்று அவரிடம் வினவினேன். சார் டாக்டர்-க்கு படிக்க எவ்வளவு செலவாகும் என கேட்டார், எந்த டாக்டர் பீல்ட் மனிதர்களுக்கா, விளங்குகளுக்கா என அவரிடம் கேட்டேன், அவர் மனிதர்களுக்குத்தான் சார் என்றார், அரசு மருத்துவக்கல்லூரி என்றால் ஐந்து வருடத்திற்கு சுமாராக இரண்டு லட்சம் ஆகலாம், தனியார் என்றால் சுமார் இருபது ஐந்து லட்சம் முதல் முப்பது லட்சம் வரை செலவாகலாம் என்றேன். அதற்க்கு அவர் அரசு க்கல்லூரிதான் சரிப்பட்டு வரும் என்றார். இவர் என்ன சம்பந்தமே இல்லாமல் சொல்கிறாரே என எண்ணிக்கொண்டே அவரிடம், பீல்ட் நீங்கள் இந்த வயதிற்கு மேல் எல்லாம் மருதுவக்கல்லுரியில் சேர முடியாது என்று கூறினேன், உடனே அவர் எனக்கில்லை சார், நேற்று எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது, அவன் ஜாதகத்தை கணித்தேன், ஜாதகப்படி அவன் டாக்டர் ஆவான் என்றுள்ளது அது தான் செலவு எவ்வளவு ஆகும் என்று உங்களிடம் விசாரித்தேன் என்றார். எனக்கு தலை சுற்ற ஆரம்பித்து விட்டது.

Wednesday, December 24, 2008

செட்டிநாடு குதிரை பண்ணையில் பல விதமான மூட நம்பிக்கைகள் உண்டு. ஒரு குதிரைக்கு வயித்து வலி வந்து விட்டால் அதற்கு எல்லா மருந்துகளும் கொடுக்கப்பட்ட பின்னரும் சில அறிவியலுக்கு அப்பாற்பட்ட முயற்சிகளும் செய்யப்படும். ஒரு முறை ஒரு ஜூனியர் டாக்டர் வயித்து வலியில் தவித்துக்கொண்டு இருந்த ஒரு குதிரைக்கு வேறு ஒரு மருந்தை தவறுதலாக கொடுத்து விட்டார். அதிர்ஷ்ட வசமாக அந்த குதிரை பிழைத்துக்கொண்டது, அவ்வளவுதான் அதற்குப்பிறகு வயித்து வலியென்றால், அதற்கான மருதுக்குப்பிறகு, சம்பந்தமே இல்லாத மற்றொரு மருந்தும் கொடுக்கப்படும். பல்வேறு விதமான ஊசி மருத்துகள், டிரிப், டியுபின் வழியாக எண்ணெய், எனிமா,இன்ன பிற மருந்து வகைகள் என கால்நடை மருத்துவத்தில் உள்ள சாம பேத தண்ட முறைகளை எல்லாம் கையாண்டாலும்,கற்பூரம் ஏற்றி ஒரு தேங்காய் சுற்றி உடைத்து முடித்தால் தான் நம்மால் முடிந்த எல்லா சிகிச்சைகளும் முடிவடைந்து விட்டது இனி ஆண்டவன் விட்ட வழி என நிம்மதியாக இருக்க முடியும். சில சமயங்களில் அவசரக்காலத்தில் இந்த தேங்காய், பூசணிக்காய் போன்றவை இல்லாது போனால் அவ்வளவுதான் பெரிய டாக்டர் ருத்ரதாண்டவம் ஆடி விடுவார்(ஏதாவது முக்கியமான மருந்து இல்லை என்றால் கூட பொறுத்து கொள்வார், ஆனால் கும்குமம், தேங்காய்,கற்பூரம் இல்லை என்றால் அவ்வளவுதான்.)

Monday, December 22, 2008

சில சமயங்களில் எதற்கு ஆமாம் சொல்கின்றோம் என்பதே தெரியாமல் ஆமாம் என்று கூறி விடுவோம், பல முறை நான் அதை பெரிய டாக்டர் இடம் செய்திருக்கிறேன். என்ன செய்வது ஊரோடு ஒத்து வாழ வேண்டுமே. இதனால் எனக்கும் டாக்டர் ராஜ் க்கும் இடையே சில சமயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதுண்டு. ஒரு முறை புதிதாக பிறந்த குட்டி ஒன்று சரியாக எழுந்து நிற்க முடியாமல் இருந்தது. பெரிய டாக்டர் என்னை அழைத்து அந்த குட்டிக்கு மாவு கட்டு போடுமாறு கூறினார். நானும் கண்ணை மூடிக்கொண்டு அவருடைய உத்தரவை நிறைவேற்றினேன். டாக்டர் ராஜ் என்னிடம் கடும் கோபமடைந்து, அந்த குட்டி எழுந்திரிக்கவே திராணியற்று உள்ளது, எப்படி நீ மாவு கட்டு போடலாம் என கேட்டார், நானும் அவரிடம் முட்டாள் தனமாக பெரிய டாக்டர் தான் என்னுடை பாஸ் அவர் சொன்னதை செய்ய வேண்டியது மட்டும் தான் என் வேலை என்று சற்று கோபமாக கூறிவிட்டேன், பின்னர் என் தவறை உணர்ந்து அவரிடம் மன்னிப்பு கேட்டேன். இப்படி சில சமயங்களில் எங்களுக்குள் சில உரசல்கள் எழுந்தாலும் எங்கள் ஐந்து பேருக்குள்ளும் ஒரு நல்ல புரிதல் இருந்தது.

Sunday, December 21, 2008

ராஜன் ரொம்ப சுத்தம் பார்ப்பவன். நாங்கள் எல்லாம் காபியில் ஈ இருந்தால் தூக்கிப்போட்டு விட்டு குடித்து விடுவோம், டம்ளர் விளிம்பில் ஈ உட்கார்ந்து எழுந்து போனால் கூட அவன் அந்த காப்பியை கீழே ஊத்தி விடுவான். பார்பர் கடைக்கு சென்றால், அங்கு அவன் செய்யும் கூத்து தமாஷாக இருக்கும். அங்கே மேலே போடப்படும் துணியை போர்த்திக்கொள்ள மாட்டான், கத்திரிக்கோல் அவன் முன்னாள் சுத்தமாக கிருமி நாசினியில் சுத்தப்படுத்தப்பட வேண்டும், அவன் முன்னால்தான் பிளேடு மாற்றப்பட வேண்டும் என பல கண்டிஷன்கள் போடுவான். சீப்பு அவனே எடுத்து செல்வான். அங்கே இருக்கும் முகம் பார்க்கும் கண்ணாடியை மட்டுமே எவ்வித மாற்றமும் இல்லாமல் உபயோகிப்பான். அவனிடம் ஒரு முறை நான்," எல்லாம் சரி ஒரு முறையாவது நீ நம்முடைய மெஸ் க்குள் சென்று பார்துல்லாயா, ஒரு முறை சென்று பார் அப்புறம் இந்த சுத்தம் பார்க்கும் முறையை விட்டு விடுவாய்" என்றேன். அவனும் ஒருமுறை சென்று பார்த்தான், பிறகு என்னிடம் "சரியாக தான் சொன்னீர்கள் இனி மெஸ்-க்குள் செல்லவே கூடாது ,வியாதி வந்து விடும்" என்றான்.

Saturday, December 20, 2008

அழகுமுருகனுக்கும் கணேசனுக்கும் இளம் வழுக்கை உண்டு. அதை பற்றி இருவருமே பெரும் கவலை கொள்வார்கள். Foltene என்னும் விலை உயர்ந்த மருந்தை உபயோகப்படுத்துவார்கள். இது மட்டுமல்லாமல் பல உத்திகளையும் கையாள்வார்கள். டாம்ப்கோல் எனப்படும் சித்த மருந்துவ எண்ணெயும் உபயோகப்படுத்துவார்கள். ஒரு முறை இரவு நேரத்தில் நான் எங்கள் கிளினிக் உள் செல்ல நேர்ந்தது. அப்போது உள்ளே உள்ள அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டிருந்தது. நடுவிலே டாக்டர் கணேசன் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். அவர் தலையில் சிவப்பு நிற ஒலி வட்டம் தெரிந்தது, திடீர் என அவருக்கும் ஞானோதயம் பிறது விட்டதோ எண்ணி அவர் அருகில் சென்று என்னவென்று பார்த்தேன், அவர் பின்னால் சின்னையா நின்று கொண்டு INFRA RED LAMP ஐ அவர் தலையில் படும் படி பிடித்திருந்தான். நான் அவரிடம் இது என்ன சிகிச்சை என்று கேட்டேன். அவர், தம்பி நான் டாம்ப்கோல் தலையில் தடவி உள்ளேன், மருந்து உள்ளே செல்ல வேண்டுமென்றால் ரத்த ஓட்டம் அதிகமாக வேண்டும் அதற்குதான் இந்த விளக்கை பிடிக்க சொன்னேன் என்றார். பாத்து செய்யுங்க வேர் சுத்தமா பொசுங்கி விடப்போகுது. அப்பறம் முதலுக்கே மோசமாகி விடும் என்றேன். மற்றொரு முறை அவர் என்னிடம், தம்பி ஆஸ்திரேலியாவில் வழுக்கை தலைக்கு புதிதாக ஒரு சிகிச்சை கண்டு பிடித்திருக்கிறார்கள் , அதில் வைக்கோலை நன்றாக அரைத்து வழுக்கை தலையில் தடவி விடுவார்கள், பின்னர் ஒரு மாட்டை விட்டு அந்த வைக்கோலை நக்க விடுவார்கள். இதனால் ரத்த ஓட்டம் அதிகமாகி முடி முளைக்கும் என்று கூறினார், ஆனால் நான் அதை இங்கு இருக்கும் குதிரை குட்டியை விட்டு செய்யலாம் என்று நினைக்கிறேன் , உன்னோட யோசனையை சொல் என்றார். அண்ணாச்சி இது ரிஸ்கான முயற்சி, மாட்டுக்கு மேல் தாடையில் பல் இருக்காது, அதனால் கடிக்க முடியாது, அனால் குதிரைக்கு கத்திபோல கூர்மையான முன் பற்கள் உண்டு, அப்புறம் தோலோட எடுத்துடுச்சினா ஏதோ கொஞ்சம் நஞ்சம் இருக்குறதும் காலியாகிவிடும் என்று எச்சரித்தேன்.

Friday, December 19, 2008

நாங்கள் அனைவரும் ஒன்டிக்கட்டைகளாக இருந்ததால் எங்கள் அனைவருக்கும் தனித்தனி அறைகள்தான். நான் தங்கி இருந்த கட்டிடத்தில் இன்னொரு அறையில் ராமு,முரளி மற்றும் முத்துராமன் தங்கியிருந்தார்கள், தினமும் இரவு பன்னிரண்டு மணி வரை அனைவரும், கதையடித்துக்கொண்டு இருப்போம். சில நேரங்களில் பீல்ட் மென் சுப்ரமணியும் எங்களுடன் கலந்து கொள்வார். அவர் வந்து விட்டால் எங்களுக்கு ஓட்டுவதற்கு அருமையான ஆள் கிடைத்து விட்டார் என்றே அர்த்தம். ஒரு முறை நள்ளிரவில் திடீர் என்று என் ரூம் கதவை முத்துராமன் வேர்க்க விறு விறு க்க தட்டினார், நான் என்னவோ எதோ என்று அலறியடித்து எழுந்தேன். இரவில் எதோ தன்னை அழுதியதாகவும், அவரால் குரலை கூட எழுப்ப முடிய வில்லை என்றும் என்னிடம் கூறினார், நான் அவரிடம் முரளி அல்லது ராமு தூக்கத்தில் உங்கள் மேல் கால் போட்டு இருப்பார்கள் என்று சமாதானப்படுத்தினேன். ரூமில் வேறு யாரும் இல்லை, மற்றவர்கள் அனைவரும் வெளியே சென்று விட்டார்கள், தான் மட்டும்தான் இருப்பதாகவும் அவர் கூறினார். அன்று இரவு அவர் என்னுடைய ரூமிலே உறங்கினார். அடுத்த நாள் பீல்ட் மென் அந்த இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கு முன் யாரோ ஒரு aal இறந்து விட்டதாகவும் அந்த ஆவி muththuraamanai amukki இருக்கலாம் என்று கதை விட்டார்,மற்றவர்களுக்கு இது தெரிந்தவுடன், அந்த அறையே பக்தி பழமாக மாறி விட்டது. ராமுவின் கட்டிலில் தலை மாட்டில் ஐயப்பன் படம், கால் மாட்டில் பிள்ளையார் படம், மெத்தைக்கடியில் விபூதி, ரூமின் சுவர் எங்கும் சாமிப்படம் என எதோ சினிமாவில் வரும் சாமியார் அறை ரேஞ்சுக்கு அந்த இடமே மாறி விட்டது.

Thursday, December 18, 2008

யாராவது விருந்தினர்கள் பண்ணைக்கு வந்து சென்றால், அவர்கள் வெளியில் சென்ற புழுதி அடங்குவதற்குள் திருஷ்டி பூசணிக்காய் அல்லது தேங்காய் உடைக்கப்பட்டு விடும், ஐயாவே வந்து சென்றால் கூட திருஷ்டி பூசணிக்காய் உடைக்கப்படும். வாரம் தவறாமல் செவ்வாய்,வெள்ளிக்கிழமைகளில் திருஷ்டி சுற்றுவது என்பது ஒரு தவிர்க்க முடியாத நடைமுறையாகி விட்டது, இதற்கிடையில் முட்டை தங்கவேலு வேறு அவருக்கு கோழிக்கறி சாப்பிட வேண்டும் என்று தோணும் போதெல்லாம், பெரிய டாக்டர்-இடம் வந்து ஐயா ரத்தபலி குடுத்தா நல்லா இருக்கும், குதிரைக்கு வயித்து வலி வர்றது அதிகமாயிடிச்சி என லைட்டாக தூபம் போடுவார். பெரிய டாக்டர்-ம எதற்கு வம்பு என்று ஒரு கோழி அடித்து சாமி கும்பிட சொல்லுவார். இந்த நடைமுறைகளால் பண்ணைக்கான பூசணி,தேங்காய் ஆகியவற்றின் தேவை அதிகரித்து, இதற்காகவே பூசணி விவசாயம் தொடங்கப்பட்டு அதுவும் உற்பத்தி செய்யப்பட்டது.

Wednesday, December 17, 2008

புதுக்கோட்டை அருணாசலம் என்பவர் எங்கள் பண்ணையில் பணிபுரிந்தார்(அவர் என்ன பணியில் இருந்தார் என்பது யாருக்கும் தெரியாது ஏனென்றால் அவர் எந்த வேலையும் செய்து நான் பார்த்ததில்லை, பெரும்பாலும் தினத்தந்தி படித்துக்கொண்டு இருப்பார்), அவரை எல்லோரும் புதுக்கோட்டையார் என்று அழைப்பார்கள். பண்ணையில் விருந்தினர்கள் வரும்போது அவர்களுக்கு வழங்குவதற்காக எப்போதும் ஒரு பாட்டில் ஸ்காட்ச் விஸ்கி வைத்திருப்பார்கள், ஒரு முறை அதை பரிமாறுவதற்காக எடுத்த பொது அதன் கலர் கிட்டத்தட்ட தண்ணீர் நிறத்தில் இருப்பதை ப்பார்த்து டாக்டர் சச்சிதானந்தம் அவருடைய விசாரணையை தொடங்கினார். புலன் விசாரணையில் பல உண்மைகள் வெளி வந்தது. இந்த பூனையும் பால் குடிக்குமா என்று இருந்த புதுக்கோட்டையார் தினமும் இரவில் அந்த பாட்டிலில் இருந்து கொஞ்சம் குடித்து விட்டு அதற்கு சம அளவு தண்ணீர் ஊற்றி வைத்துள்ளார், நாளாக நாளாக விஸ்கி தண்ணீராக மாறி விட்டது.
புதிதாக ஒரு குதிரை குட்டி போட்டால் பலருக்கும் ஆர்வத்தை கிளப்புவதாக அமைந்து விடும். ஆனால் ஜூனியர் டாக்டர் களைப்பொருத்தவரை தலைவலிதான். ஏனென்றால் குட்டிபோட்ட விஷயத்தை முதலாளியிடம்(ஐயா) தெரிவிப்பதற்கு ஒரு பெரும் போட்டியே நடக்கும்(இதில் ஜூனியர் டாக்டர் கள் கிடையாது). பண்ணையின் மேலாளர் அருணாசலம் அவர்தான் முதலில் சொல்ல வேண்டும் என்று நினைப்பார். ஆனால் இரவும் பகலும் கஷ்டப்படுகிறவன் நான்தான், எனவே நான்தான் ஐயாவிடம் சொல்ல வேண்டும் என பெரிய டாக்டர் நினைப்பார். காலை ஆறு மணிக்கு தொலைபேசி அடித்தால் ஜூனியர் டாக்டர் கள் பின்னங்கால் பிடரியில் பட ஓடுவார்கள், ஐயாதான் முன்னாள் இரவு எந்த குதிரை குட்டிப்போட்டது என விசாரிக்க கூப்பிடுவார், சொன்னால் பெரிய டாக்டர்-இன் கோபத்தை சம்பாதிக்க வேண்டும், தெரியாது என்றால் போலிங் அட்டென்ட் செய்யாமல் தூங்கிக்கொண்டு இருந்தாயா என ஐயா கோபப்படுவார். ஏன் வம்பு என போன் எடுக்காமலே இருந்து விடுவோம்.

Sunday, December 14, 2008

sprinkler சின்னையா உலக அரசியல் முதல் லோக்கல் கிரிகெட் போட்டி வரை விரல் நுனியில் வைத்துக்கொண்டு விவாதம் புரிவதில் மிகுந்த ஈடுபாடு உடையவன். ஒரு முறை சென்னையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையே டெஸ்ட் போட்டி பார்ப்பதற்காக சென்றான். அதற்க்கு முதல் நாள் இரவு என்னிடம் வந்து சார் எனக்கு மல சிக்கல் உள்ளது அதற்கு நம் பண்ணையில் ஏதாவது மருந்து உள்ளதா என கேட்டான். நானும் அவனுக்கு லிக்விட் பாரபின் நூறு மில்லி கொடுத்து குடிக்க சொன்னேன். அடுத்த நாள் அவன் கிரிகெட் போட்டி பார்க்க செல்வது எனக்கு தெரியாது. அவன் எதிர்பார்த்தது என்ன வென்றால் அடுத்த நாள் விடியல் காலை வயிறு சுத்தமாகி விடும் ,பின்னர் போட்டியின் பொது அவஸ்தையின்றி இருக்கலாம் என்பது. ஆனால் நடந்தது வேறு, நான் கொடுத்த லிகிட் பாரபின் உடலில் எந்த மாற்றமும் அடையாமல் , எந்த வித முன்னறிவிப்புமின்றி அவனுடைய உடலிலிருந்து, சத்தமில்லாமல் வெளியேற ஆரம்பித்து விட்டது, அவன் கிரிகெட் மேட்ச் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவன் பான்ட் முழுவதும் எண்ணெய்க்கரை ஆகி விட்டது. "ஒரே மானக்கேடு ஆகிடுச்சி சார், நல்ல வேலை எண்ணெய் மட்டும் வந்தது" என என்னிடம் வந்து புலம்பி தள்ளினான்.

பண்ணையில் வேலை செய்தவர்களில் வெங்கட்ராமன் ஒரு interesting character பகலில் ஒரு விதமாகவும் இரவில் வேறு விதமாகவும் நடந்து கொள்வார். பகலில் எவ்வளவுக்கெவ்வளவு நல்லவரோ இரவில் தலை கீழாக மாறி விடுவார். பகலில் அவரை யாரவது திட்டிவிட்டாலோ சண்டையிட்டாலோ ஒன்றும் எதிர்த்து பேச மாட்டார், ஆனால் இரவில் அவர்களின் பைக் பெட்ரோல் டாங்கியில் தண்ணீர், அல்லது சிறுநீர் கலந்து விடுவார். ஒரு முறை டாக்டர் சச்சிதானந்தம் அவரை திட்டி விட்டார் என்பதற்காக அவருடைய ஷூக்குள் குண்டூசிகளை குத்தி, சிறுநீர் கழித்து வைத்திருந்தார். அது தெரியாமல் அடுத்த நாள் காலை டாக்டர் சச்சிதானந்தம் ஷூக்குள் காலை நுழைத்து காயப்பட்டார். மற்றொரு முறை டாக்டர் கணேசன் அவரை திட்டி விட்டதற்காக அவருடைய பைக் பெட்ரோல் டாங்கியில் தண்ணீரை ஊற்றி வைத்து விட்டார். இது தெரியாமல் டாக்டர் காலையில் ஒரு மணி நேரம் நாக்கு வெளியே தள்ள உதைத்தும் ஸ்டார்ட் ஆக வில்லை.

Saturday, December 13, 2008


ஜால்ரா அடிப்பதில் எனக்கும் அழகுமுருகனுக்கும் எப்போதும் ஒரு சிறிய போட்டி இருந்து கொண்டே இருக்கும். இது பலமுறை குதிரை குட்டிகள் உடல் நிலை சரியில்லாமல் இருக்கும்போது நன்றாகவே எதிரொலிக்கும். பெரிய டாக்டர் ஏதாவது குதிரை உடல் நிலை சரியில்லை என்றால் பெரும்பாலும் எங்கள் இருவரில் யாரிடமாவதுதான் கேட்பார், ஏனென்றால் டாக்டர் ராஜ் உண்மையை, எந்த தயவு தாட்சண்யமும் இன்றி நேரடியாக கூறி விடுவார். நாங்கள் கொஞ்சம் அதை மழுப்பி கூறுவோம். ஒரு முறை குட்டி ஒன்று கொஞ்சம் சீரியஸ் நிலைமையில் இருந்தது, என்னிடம் அதன் நிலை பற்றி கேட்டார், நான் முன்னைக்கு இப்ப பரவாயில்லை என்று கூறி சமாளித்தேன். அழகுமுருகன் இடமும் கேட்டார், அவனும் நான் சொன்னதையே கூறினான். உடனே நீங்கள் எப்படி அது இப்போது பரவாயில்லை என்று கூறுகிறீர்கள் என்று அவர் கேட்டார். முன்னைக்கு இப்ப வாலாட்டும் விகிதம் அதிகமாகி உள்ளது என்று கூறி அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தினான். ஏனென்றால், குதிரையின் உடல் நிலையை அறிய இதய துடிப்பு, நாடி துடிப்பு, உடல் வெப்பம், என பல அறிகுறிகள் உள்ளபோது புதிதாக வாலாட்டும் விகிதத்தை அவன் கண்டு பிடிதுல்லானே என்பதுதான்.

எங்களுடன் பனி புரிந்தவர்களில் பீல்ட் மென் சுப்பிரமணி ஒரு முக்கியமான பாத்திரம் என்றே கூறலாம். அவருக்கும் ராமுவுக்கும் அடிக்கடி ஈகோ மோதல்கள் நிகழும், அவை பெரும்பாலும் நகைச்சுவையாகவே இருக்கும். பீல்ட் மென் அவர் திருமணத்திற்காக தீவிர பெண் தேடுதலில் ஈடு பட்டிருந்தார், அவர் பண்ணையில் விவசாய பணியாளர்களின் மேஸ்திரி போன்ற பணியில் இருந்தார், ஆனால் வெளியில் தான் agricultural officer என்று கூறி வந்தார். ஒரு முறை அவர் டாக்டர் சச்சிதானந்தம் அவர்களிடம் வந்து தன்னை பார்க்க பெண் வீட்டார் வருவதாகவும், அவர்கள் வந்து கேட்டால் நீங்கள் அவர்களிடம் நான் இங்கு agricultural officer ஆக பணி புரிவதாக கூற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார், அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார். அவர்கள் எப்போது வருவார்கள் என்பது அவருக்கும் தெரியாது. ராமுவிடம் அவர்கள் ஆபீஸ் க்கு வந்தால் அவர்களை இங்கேயே உட்கார வைத்து விட்டு நீ வந்து எனக்கு தெரியப்படுத்து நானும் என்னுடைய உடைகளை மாற்றி தயாராக இருப்பேன் என்று கூறி வைத்தார். அடுத்த நாள் காலை எட்டு மணிக்கே அவர்கள் வந்து விட்டார்கல். ராமு அவர்களை நேராக பீல்ட் மேன் பணி செய்யும் பகுதிக்கு அழைத்து சென்று விட்டார், பீல்ட் மேனுக்கு முன்னரே தெரியப்படுத்தவும் இல்லை. அங்கு பீல்ட் மண் ஒரு காக்கி அரைக்கால் டவுசர் மாட்டிக்கொண்டு, வாயில் பீடி புகைய , தலைப்பாகையோடு புள் வெட்டிக்கொண்டு இருந்தார். ராமு பெண் வீட்டு காரர்களிடம், இவன்தான் பீல்ட் மேன் சுப்பிரமணி(தான் அவரைவிட மேல் அதிகாரியாக்கும் என்பது போல்"இவன்தான்" என்பதை கொஞ்சம் அழுத்தம் கொடுத்து கூறினார்). பீல்ட் மேன்-இன் கோலத்தை கண்ட பெண் வீட்டுக்காரர்கள் மிகுந்த கோபம் அடைந்து எத்தனை பேரடா இப்படி கிளம்பி இருக்கிறீர்கள் என அவரை அடிக்காத குறையாக திட்டி விட்டு சென்றார்கள்.
காலை உணவருந்திய பின்னர் செய்தித்தாள் படிக்கும் நேரத்தில் சில சமயம் எங்களுக்குள் வாக்குவாதங்கள் நிகழ்வதுண்டு. சில சமயங்களில் எனக்கும் அழகுமுருகனுக்கும் ஜோசியம் பற்றி விவாதங்கள் நடக்கும், நான் அப்போது ஜோசியத்தில் நம்பிக்கையில்லாமல் இருந்தேன், ஆனால் அவனோ மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தான். நான் அவனிடம் எல்லா ராசிக்கும் பலன்கள் ஒரே மாதிரிதான் எழுதுகிறார்கள், வார்த்தைகளை மாற்றிப்போட்டுல்லார்கள் என்று விவாதித்து கொண்டிருந்தேன். அப்போது அவன் அதெல்லாம் கிடையாது நன்றாக பார்த்துதான் எழுத்து கிறார்கள். நீங்கள் வேண்டுமானால் பரிசோதித்து பாருங்களேன் என்றான். அப்போது எங்கள் பண்ணையின் டைப்பிஸ்ட் சங்கர நாராயணன் வந்தார், அவருக்கு வயது அறுபதுக்கும் மேல். நான் அவரிடம் அவர் ராசிக்கான பலனை படிக்க சொல்லி கேட்டேன், முதல் வரியிலேயே அவருக்கு காதல் கை கூடும் , திருமண வாய்ப்பு உண்டு என்று இருந்ததை கேட்டு அனைவரும் கொல்லென்று சிறிது விட்டார்கள், அவருக்கு ஒன்றும் புரிய வில்லை. பின்னர் அழகுமுருகன் என்னிடம் எந்த புத்துல என்ன பாம்பு இருக்குன்னு யாருக்கு தெரியும் என்று கூறினான்.

Friday, December 12, 2008

ஜூனியர் டாக்டர்களில் பெரிய டாக்டர் போல் நடந்துகொள்பவர் என்றால் அது கணேசன் தான். அவர் பெரும்பாலும் இரவுப்பணியில் தான் இருப்பார். அவர் பணிக்கு வரும்போது , தேநீர், சிகரெட் ,தீக்குச்சி, போர்வை மற்றும் தலையணை(இரவுப்பனிக்கு வருபவர்க்கு எதற்கு போர்வை தலையணை என்று கேட்க்கப்படாது). அவருடைய அச்சிச்டன்ட் சின்னையா(sprinkler சின்னையா இன்னொரு சின்னையா உண்டு- கொட்டாய் சின்னையா) எல்லாவற்றையும் தயாராக வைத்திருப்பான். அவர் வந்தவுடன் தம் போடுவதற்கு தீப்பெட்டியை எடுத்து கொடுக்கும் விதமே அலாதியானது. அவர் முன்னாள் நின்று கொண்டு அவருக்கு முதுகை காட்டியவாறு நின்று அவனுடைய பாக்கெட் லிருந்து தீப்பெட்டியை எடுத்து கொடுப்பான் (மரியாதையாம்). ஜூனியர் டாக்டர்கள் அனைவரும் ஒன்டிக்கட்டைகள் என்பதால் வாரத்துக்கு இருமுறையாவது தண்ணிப்பார்ட்டி உண்டு. பார்ட்டி க்கான காரணம் பெரும்பாலும் பிறந்த நாளாக இருக்கலாம், அது யாருடைய பிறந்த நாள் என்பது முக்கியம் அல்ல,(உதாரணத்திற்கு டாக்டர் களில் ஒருவருக்கோ, ஏதாவது அரசியல் தலைவருக்கோ அல்லது எதுமே இல்லை என்றால் வீட்டில் கன்னுக்குட்டி போட்டதுக்க்காகவாவது இருக்கலாம், சில சமயம் புது சட்டை எடுத்ததுக்காக கூட நடந்தது உண்டு ). தண்ணி பெரும்பாலும் ஜின் தான் இருக்கும் ஏனென்றால் அதுதான் நாற்றம் அடிக்காது. மற்றவை காட்டிக்கொடுத்துவிடும். சிலர் அது வருங்கால சந்ததி பெருக்கத்தை பாதிக்கும் என்பார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்க வில்லைபோதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு சந்ததிகளை பெருக்கி உள்ளோம்.
போட்டு கொடுப்பதில் ராமு வின் வழியே தனி . டாக்டர் பிஸியாக இருக்கும்போது வருவார், பெரிய டாக்டர் அவரிடம் என்ன ராமு எதாவது விஷயமா என்பார். ஒண்ணுமில்லை சார் சும்மா வந்தேன் என்பார். அதுவே எதோ விஷயம், இருக்கிறது என்பதற்கு அறிகுறி. பெரிய டாக்டர் வேலை முடியும் வரை பொறுமையாக இருப்பார். பின்னர் லேசாக ," சார் முட்ட தங்கவேல் என்று ஆரம்பித்து கொஞ்சம் கேப் விடுவார். பெரிய டாக்டரின் ஆர்வத்தை இது தூண்டும், எதோ விஷயம் உள்ளது என்று. சும்மா சொல்லு ராமு என்ன விஷயம் , இல்ல சார் நீங்க பிஸி யாக இருக்கீங்க , உங்க மூட் கெடுக்க வேண்டாம், என்று பார்கிறேன் என்பார். அவ்வளவுதான் பெரிய டாக்டர் தலை வெடித்துவிடும் போல் ஆகி விடுவார். பரவாயில்லை சொல்லு ராமு என்று அவர் நான்கு ஐந்து முறை சொன்ன பிறகே கோல் மூடும் வேலையை தொடங்குவார், இப்படி செய்வதால் maximum impact இருக்கும்.

Thursday, December 11, 2008

காக்காய் பிடிப்பது ஒரு கலை அது எல்லாருக்கும் அவ்வளவு விரைவில் வந்து விடாது, அதே போல் எல்லா நேரத்திலும் உதவிடாது. அதில் சில சம்பவங்கள் என்னை ஈர்த்தவை, நானே போட்டுக்கொடுக்கப்பட்டிருந்தாலும் பல என்னை வியக்க வைத்தவை. ஒரு முறை பண்ணையில் பணிபுரியும் பணியாளர்களுக்கிடையே விளையாட்டு போட்டிகள் நடந்தது, அதில் என் தலைமையில் ஒரு அணியும் டாக்டர் புவனகுமார் (பெரிய டாக்டர்) தலைமையில் ஒரு அணியும் கிரிக்கெட் போட்டியில் போட்டியிட்டோம். நான் பேட்டிங் செய்து கொண்டிருந்தேன், பெரிய டாக்டர் ஸ்லிப் திசையில் நின்று பீல்டிங் செய்து கொண்டிருந்தார், அவருடைய தலைமை ஜால்ராவான நடராஜன் விக்கெட் கீபெராக நின்று கொண்டிருந்தான், பெரிய டாக்டர் நின்று கொண்டிருப்பதை காண சகிக்காத அவன், அவரருகில் சென்று "ஐயா நிற்கிறீர்களே நாற்காலி போடவா, உட்கார்ந்து கொண்டு பீல்ட் செய்யுங்களேன்" என்று கூறினான். பெரிய டாக்டரின் முகத்தில் வெட்கம் பிடுங்கி தின்றது, நான் வேறு காதில் விழும் தூரத்தில் நின்று கொண்டிருந்தேன். டாக்டரின் ரெண்டாம் நம்பர் ஜால்ராவான் ராமு பற்றி பிறகு பார்ப்போம்.

Wednesday, December 10, 2008

நாங்கள் ஐந்து ஜூனியர் டாக்டர்கள் ஒன்றாக பணிபுரிந்தோம் அனைவரும் ஒரு வருடம் ஜூனியர் சீனியர் , எனவே எங்களுக்குள் கல்லூரி முதலே அறிமுகம் உண்டு. அழகுமுருகன் மற்றும் ராஜன் இருவரும் எனக்கு ஒரு வருடம் ஜூனியர்கள், ராஜ் மற்றும் கணேசன் எனக்கு ஒரு வருடம் சீனியர்கள். ஒவ்வொரு நாளும் காலை உணவு அருந்தும் பொது கண்டிப்பாக எல்லோரும் சந்தித்துக்கொள்வோம். பெரும்பாலும் எங்களுடன் டாக்டர் சச்சிதானந்தம் காலை உணவில் கலந்து கொள்வார். உணவருந்திய பிறகு டாக்டர் ராஜ் அறையில் அனைவரும் கூடி அன்றைய செய்தி தாள் படித்து விட்டு, தம் போடுபவர்கள் தம் போட்டு செல்வது வழக்கம், ராஜ் எல்லோருக்கும் ஒரு கட்டுப்பாடு விதித்து இருந்தார், அவர் அறையில் தமிழ் பத்திரிக்கை எடுத்து வரக்ககூடாது என்று, ஆங்கில பத்திரிக்கை மட்டுமே அனுமதி, மேலும் அவர் அறையில் தமிழில் பேசக்கூடாது , மீறினால் ஒவ்வொரு வார்த்தைக்கும் இரண்டு ரூபாய் அபராதம். பெரும்பாலும் அழகுமுருகந்தான் அபராதம் கட்டுவது வழக்கம். இந்த பணம் வார கடைசியில் தண்ணி அடிக்க சைடு டிஷ் வாங்க உபயோகிக்கப்படும். எனக்கு கொஞ்சம் ஆங்கிலம் வருவதற்கு இந்த கட்டுப்பாடும் ஒரு காரணம் என்று கூறலாம்.

Tuesday, December 9, 2008

சின்ன டாக்டர்களுக்குள் அவ்வப்போது சில ஈகோ மோதல்கள் வருவதுண்டு , புதிதாக சேர்ந்த புதிதில் எல்லோருக்கும் ஆர்வக்கோளாறு அதிகமாகவே இருக்கும், அப்படிதான் அழகுமுருகன் என்ற என்னைவிட ஒரு வருடம் ஜூனியர் டாக்டர் சேர்ந்த புதிதில் ஆர்வக்கோளாறு காரணமாக ரொம்ப தைரியமாக குதிரைக்கு வெகு அருகில் சென்று அதை கையாண்டு கொண்டிருந்தார், நான் அவரிடம் சில முறைகள் எடுத்து சொல்லிப்பார்த்தேன், அவர் என்னமோ நான் அவருடைய முன்னேற்றத்தில் தடை போடுவதாக எண்ணி அலட்சியமாக பேசினார் , நானும் அதன் பிறகு அவருக்கு எடுத்து கூறுவதை நிறுத்திக்கொண்டேன். ஒரு முறை அவர் தன்னுடடைய தாடையை ஒரு குதிரையின் மூக்கின் மேல் வைத்து கொஞ்சிக்கொண்டிருந்தார் அதைப்பார்த்த நான் அவரிடம் சொல்ல வாயெடுத்து பின்னர் அடக்கிகொண்டேன் நமக்கேன் வம்பென்று. குதிரை சடாரென்று தலையை மேலே தூக்க அவருடைய முன்பற்களில் ஒன்று பாதி உடைந்து சிதறியது. சிறுது நேரத்திற்கு பின் அவரிடம் என் மன ஓட்டத்தில் நான் எண்ணியதை அவரிடம் கூறினேன் . இரண்டு நாட்களுக்கு என்னிடம் முகம் கொடுத்து அவர் பேச வில்லை.

புலம்பல்கள் தொடரும்

Monday, December 8, 2008

என்னதான் படித்து கல்லூரியில் பழம் தின்று கொட்டை போட்டு வந்தாலும் அனுபவம் நமக்கு பல பாடங்களை கற்ப்பிக்கும். படிக்கும் காலத்தில் குதிரை படுக்காது என்றே நாம் பயிற்றுவிக்கப்படுகிறோம், ஆனால் நன்றாக படுத்து சில குதிரைகள் குறட்டை விட்டு தூங்கி மற்ற குதிரைகளின் தூக்கத்தை கெடுக்கும் என்பதுதான் உண்மை. நான் வேளையில் சேர்ந்த புதிதில் பெரிய டாக்டரின் அறிவுரையின் பேரில் ரௌண்ட்ஸ் சென்றேன். அப்போது ஒரு குதிரை வசதியாக காலை பரப்பிக்கொண்டு தூங்குவதை கண்டு பதறியடித்து மீசை தங்கவேலுவிடம் அந்த குதிரையை கவனிக்குமாறு கூறினேன். அவர் சர்வ சாதாரணமாக அது அப்படிதான் பிறந்ததுலேருந்து இருக்கு என்று நக்கல் கலந்த தொனியில் கூறினார்.

Sunday, December 7, 2008

இன்னொரு தங்கவேலு பெரிய மீசை வைத்திருப்பதால் அவருக்கு மீசை தங்கவேலு என்ற பெயர். ரெண்டு தங்கவேளுக்களும் எப்போதும் அக்னிநட்சத்திரம் கார்த்திக், பிரபு போல முறைத்துக்கொண்டே இருப்பார்கள். ஆனால் வேலையில் இருவருமே கெட்டிக்காரர்கள். முட்டை தங்கவேல் பெரிய டாக்டரிடம் அவ்வப்போது திட்டு வாங்கிக்கொண்டே இருப்பார். ஏனென்றால் பெரிய டாக்டர் சின்ன டாக்டராக இருந்தபோது, அவரையே விரட்டுவாராம் அதன் விளைவு அவ்வப்போது வெளிப்படும். காலை வேளைகளில் பெரிய டாக்டர் வரும் நேரம் கிட்டத்தட்ட ஒரு அரச சபை போலதான் காட்சியளிக்கும். டாக்டர் வந்தவுடன் இரண்டு தங்கவேளுக்களும் ஆஜர் ஆகி விடுவார்கள், மாதம் மும்மாரி பொழிகிறதா என்ற விஷயம் முதல் யார் வீட்டில் கத்திரிக்காய் குழம்பு என்பது வரை அனைத்தும் விவாதிக்கப்படும் இதில் விகடகவி யார் என்றால் என்னைப்போன்ற ஜூனியர் டாக்டர்கள்தான், அவ்வப்போது எதையாவது சொல்லி கிச்சு கிச்சு மூட்டுவோம். பெரிய டாக்டரிடம் நக்கல் நையாண்டிகளுக்கு தீனி போடுவது பெரும்பாலும் முட்டை தங்கவேலு அல்லது ஜூனியர் டாக்டர்கள்தான்.

Saturday, December 6, 2008

என் அனுபவத்தில் நான் பல தொழிலாளர்கள், மேலாளர்கள், கால்நடை மருத்துவர்கள் உடன் பணிபுரியும் வாய்ப்பு வாய்த்தது அதில் தங்கவேலு-வை குறிப்பிட்டே ஆக வேண்டும் , இரண்டு தங்கவேலு கள் என்னுடன் பணி புரிந்தனர் இருவரும் ஜமேதார்கள் (கிட்டத்தட்ட சூபர்வைசர்கள் போன்ற பணி ). ஒரு தங்கவேலுவை கோழிமுட்டை தங்கவேலு என்றும் மற்றொருவரை மீசை தங்கவேலு என்றும் அழைப்போம் , கோழி முட்டை தங்கவேலு வியின் பெயர் காரணம் சரியாக யாருக்கும் தெரியாது , சிலர் பெரிய டாக்டரிடம் சென்று அவர் தன் கீழ் பணி புரியும் பணியாளர்களை பற்றி கோள் மூட்டு வதால் அந்த பெயர் வந்ததாகவும், வேறு சிலர் குதிரைக்காக கொடுக்கப்பட்ட கோழி முட்டைகளை அவர் சாப்பிட்டுவிட்டதால் அந்த பட்டம் அவர் பெயருடன் ஒட்டிக்கொண்டதாகவும் கூறுவார்கள்
கல்லூரியிலிரிந்து வெளியே வந்தவுடன் நம்முள்ளே இருக்கும் இறுமாப்பு, தன்னம்பிக்கை மற்றும் சுய கெளரவம் எல்லாம் தவிடு பொடியகுவதுதான் அனுபவம் கொடுக்கும் பாடம். ஆம் நான் புதிதாக செட்டிநாடு குதிரைப்பன்னையில் சேர்ந்த போது என்னுள்ளே ஒரு இறுமாப்பு நமக்கெல்லாம் தெரியும் ஏன் என்றால் நாம் படித்தவர்கள், ஆனால் அங்கே கழித்த ஒவ்வொரு நாளும் பலப்பல புதிய விஷயங்கள் எனக்கு கற்றுவித்தது அவை கல்லூரியில் படிக்காத பற்பல .
ஒரு குதிரைக்காரனின் புலம்பல்களை இங்கே பதிவு செய்ய போகிறேன் . என்னைப்பற்றி சொல்ல பெரிசா ஒன்னும் இல்லையென்றாலும் கொஞ்சம் என்னுடைய மனக்குமுறல்களை கொட்டுமிடமாக இந்த வலை அமையும் .